இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் - ஸ்டாலின்
இடைத்தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர்.
இதேபோல், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜ நாராயணன் உட்பட 23 பேர் களத்தில் உள்ளனர்.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் பிரவினா மதியழகன் உட்பட 9 பேர் களமிறங்கியுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
அந்தவகையில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது நாங்குநேரி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக தலைவர் பேசியதாவது, ஆளுங்கட்சி சார்பில் குறைகளை கேட்க யாரும் வருவதில்லை. அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களின் குறைகளை திமுக கேட்டு வருகிறது.
மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அதிமுக ஆட்சியில் இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தான் விவசாயிகளும், பெண்களும் மேம்பாடு அடைய முடியும். பெண்களின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். பெண்களின் சுயமறியாதையுடன் வாழ்வதற்காக மகளிர் சுய உதவிக்குழுவை கலைஞர் ஏற்படுத்தினார். அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முறையாக செயல்படவில்லை. விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் இலவச மின்சாரம், ரூ.7,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். மக்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் பிரச்சாரத்தின் போது பேசினார். திமுக வெற்றிபெறும் என்ற அச்சத்தில் ஆளும்கட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.