This Article is From Nov 26, 2018

இந்தியாவில் இருக்க வேண்டுமா என மக்கள் யோசிப்பார்கள்: ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை

நாட்டில் போர் சூழல் இல்லாத நிலையில் ராணுவத்திற்காக ஒதுக்கும் நிதியை குறைத்துக்கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் இருக்க வேண்டுமா என மக்கள் யோசிப்பார்கள்: ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை

வடக்கு தெற்கு என பாரபட்சம் பார்க்காமல் தமிழகத்திற்கு நிதியை அளித்தர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை அவர் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு பணிகள் குறித்த மேற்பார்வையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டு வருகிறார். அங்கு பல்வேறு கிராமங்களுக்கு சென்று நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மக்கள் குறைகளை கேட்ட மத்திய குழுவினர் டெல்டாவுக்கு நிச்சயம் உதவி செய்வார்கள் என நம்புகிறோம். அப்படி உதவி செய்யவில்லை என்றால் இந்தியாவில் இருக்க வேண்டுமா என்று என்னும் அளவிற்கு மக்கள் தள்ளப்படுவார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு இங்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பேரிடர் ஏற்படும் போது மத்திய அரசு அங்கு எப்படி கோடி கணக்கான ரூபாய்களை அள்ளிக் கொடுக்கிறார்களோ, அதேபோன்று பல கோடிகளை தமிழகத்திற்கு பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு அள்ளித் தர வேண்டும். கொடுத்தால் தான் மக்கள் நிம்மதி அடைவார்கள்.

போர் நடக்க வாய்ப்பில்லாத சூழலில் ராணுவத்திற்காக ஒதுக்கும் நிதியை குறைத்து கொண்டு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். மாநிலங்களிடையே பாரபட்சம் பார்க்க கூடாது. வடக்கு தெற்கு என பாரபட்சம் பார்க்காமல் தமிழகத்திற்கு நிதியை அளித்தர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பெரும் நிறுவனங்கள், ஆலை அதிபர்கள் புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுக்க முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

.