கடந்த 15ம் தேதி கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் 50–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
புயல் பாதிப்பால் பல இடங்களில் வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார கம்பங்களும் விழுந்து கிடக்கிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கஜா புயலால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொண்டார். மன்னார்குடியை அடுத்துள்ள காசான்குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர், அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அங்கு ஆளுநர் ஆய்வு மேற்கொள்ள மேட்டுப்பாளையம் பகுதி சென்ற போது, அங்கு பொதுமக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு இதுவரை எந்த அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என்றும் முகாமில் வழங்கப்படும் உணவு சரியாக இல்லை என்றும் கோஷம் எழுப்பியபடி நின்றனர்.
இதைத்தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஏராளமான மக்கள் ஆளுநரின் காரை மறிக்க முற்பட்டனர். ஆனால் ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் சென்ற காரை மறிக்க முடியாத நிலையில், பின்னால் வந்த அதிகாரிகளின் கார்களை மறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்து விரைவில் உரிய வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.