This Article is From Nov 13, 2018

பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் - ரஜினிகாந்த் பேட்டி

ராஜிவ் காந்தி கொலை விவகாரத்தில் ஏழு பேர் விடுதலை குறித்து ரஜினி அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் - ரஜினிகாந்த் பேட்டி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7-பேரின் விடுதலை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எந்த 7 பேர் என்று பதில் அளித்தார். அவரது பதில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இதற்கிடையே பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவா, ரஜினிகாந்த் பேரறிவாளனிடம் பேசியதாக தெரிவித்தார். இதனால் இந்த விவகாரத்தில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் ரஜினி தனது போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

எனக்கு தெரியும் என்றால் தெரியும் என்று சொல்லி விடுவேன். தெரியாது என்றாலும் அதனை தெரியாது என்று சொல்லி விடுவேன். ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் யார் என்று தெரியாத அளவுக்கு இந்த ரஜினி ஒன்றும் முட்டாள் இல்லை. நான் பேசியது திரித்துக் கூறப்படுகிறது.

என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியை ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் என்று கேட்டிருந்தால் சரியாக பதில் அளித்திருப்பேன். எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் என்று சொன்னதால்தான் எந்த 7 பேர் என்று கேட்டேன். பரோலில் வந்த பேரறிவாளனிடம் நான் 10 நிமிடங்கள் தொலைப் பேசியில் பேசி ஆறுதல் தெரிவித்தேன்.

நீண்டகாலமாக அவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுகின்றனர். எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை பாஜக அவர்களுக்கு ஆபத்தான கட்சி. ஆனால் பாஜக ஆபத்தான கட்சிதானா என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
 

.