கோவையில் நேற்று நடந்த விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
இந்தியாவின் பிரதமராக மோடி 2-வது முறையாக பொறுப்பேற்றபின், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மும்மொழி திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். கடந்த கால தமிழக வரலாறு மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களை அவர்கள் உணர்ந்து பார்க்க தவறிவிட்டனர்.
மும்மொழி திட்ட அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் தமிழக இளைஞர்கள் பொங்கி எழுந்ததை பார்த்தோம். அதனால் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு ஊக்குவிக்காதீர்கள் என்று சொன்னேன்.
மும்மொழி திட்டத்தை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம்.
அதிமுகவின் கோட்டையாக விளங்கிய கொங்கு மண்டலத்தின் 30% வாக்குகளை அதிமுகவிடமிருந்து திமுக கைப்பற்றியுள்ளது. மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, ஆளுங்கட்சிக்கு எப்படி மரண அடி கொடுத்திருக்கிறோமோ, இனி எந்த தேர்தல் வந்தாலும், மீண்டும் மரண அடி கொடுப்போம்.
விரைவில் சந்திக்க இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் அல்லது சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் அதனை நிரூபித்து காட்டுவோம். மக்களுக்கு எதிரான திட்டங்களான ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழி சாலை திட்டம் போன்றவற்றை செயல்படுத்த அதிமுக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்தார்
மேலும், சட்டப் பேரவையைக் கூட்டாமல் தற்போதைய அரசு இருந்து வருகிறது. ஏனென்றால் சட்டப் பேரவையைக் கூட்டினால், ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அதிமுக அஞ்சுகிறது. சட்டப் பேரவை கூடினால் மக்களுக்கு நன்மை தரும் நல்ல செய்தி வந்துசேரும் என்றார்.