ஆளும் கட்சியான அதிமுக தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்து வருகிறது. ஆனால், நிச்சயம் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள், அவர்கள் அம்மாவின் உண்மையான கட்சியான எங்களுக்கே வாக்களிப்பார்கள் என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது,
மக்கள் உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நேரத்தில், மக்கள் புதிய தலைவர்களை எதிர்பார்க்கிறார்கள். பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளையும் அவர்கள் தவிர்த்து வருகின்றனர். அவர்கள் மாநில கட்சிகளையே எதிர்பார்க்கின்றனர்.
அதனால், தான் 2014 தேர்தலில் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்ட ஜெயலலிதாவை மக்கள் வெற்றி பெற வைத்தனர். இந்த முறை அதேபோல் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். மக்கள் எங்களை நிச்சயம் வெற்றி பெற செய்வார்கள். உண்மையான அம்மாவின் கட்சியான நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். 95 சதவீத கழக மக்கள் எங்களுடனே இருக்கின்றனர் என்றார்.
தொடர்ந்து அவரிடம், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற நீங்கள், புதிய சின்னத்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளதா?
ஆர்.கே.நகரில் புதிய சின்னத்திலே வெற்றி பெற்றேன். அப்போது உதயசூரியன் டெபாசிட் இழந்தது. தற்போது அதையே மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலிலும் செய்து காட்டுவோம். ஜெயலலிதா வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு அனுமதி அளித்திருக்க மாட்டார். மேலும், ஏழை விவசாயிகளை பாதிக்கும் பல மத்திய அரசு திட்டங்களான ஹைட்ரோ கார்பன், ஒஎன்ஜிசி திட்டங்கள் ஜெயலலிதாவால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால், தற்போது அனைத்தும் அனுமதியுடன் நடக்கிறது.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மோடியின் அடிமைகளாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இனி மோடியுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது தனித்தே போட்டியிடுவோம் என ஜெயலலிதா தெளிவாக கூறியுள்ளார் என்றார்.
மேலும், ஆளும் கட்சியான அதிமுக தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்து வருகிறது. ஆனால், நிச்சயம் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள், அவர்கள் அம்மாவின் உண்மையான கட்சியான எங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று உறுதியாக கூறினார்.