தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்த நாள்
- பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக முதல்வருக்கு வாழ்த்து
- மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும் என்று கமல்ஹாசன் ட்வீட்
மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி முதற்கொண்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, 'தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நலமும் வளமும் பெற பிரார்த்திப்பதோடு தங்களின் மகத்தான மக்கள் சேவை தமிழ்நாடு மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிகோலும் என உறுதியாக நம்புகிறேன்.' என்று தமிழில் வாழ்த்தியுள்ளார்.
தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், 'தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
இதேபோன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் தொலைபேசியில் முதல்வரை தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தனது வாழ்த்துப் பதிவில்,'தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்.' என்று கூறியுள்ளார்.
சமீபகாலமாக டாஸ்மாக் விஷயத்திலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும் தமிழக அரசு - மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே கடும் மோதல் போக்கு காணப்படுகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு உயர் நீதிமன்றம் சென்று மக்கள் நீதி மய்யம் தடை வாங்கியுள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அங்கும், மக்கள் நீதி மய்யம் சார்பாக கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.