"பெரியாருடைய தொண்டன் என்று சொல்லிக் கொள்வதில்தான் எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் இருக்கிறது"
சென்னையில் நடந்த புத்தக நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், “பெரியாரின் பெயரை இப்போது கேட்டாலும் பலர் நடுங்குகிறார்கள்,” என்று அதரடியாக பேசியுள்ளார்.
‘குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் போராட்ட வரலாறு' என்னும் புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரின்ஸ் கஜேந்திர பாபு, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்புரை ஆற்றிய சத்யராஜ், “பெரியார் இயக்கமும் பெரியாரும் என்ன செய்தார்கள் என்று தொடர்ந்து கேட்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு சான்றாக இருக்கும். நான் ஒரு நடிகன் என்பதில் எனக்குப் பெரிய மகிழ்ச்சி கிடையாது. பெரியாருடைய தொண்டன் என்று சொல்லிக் கொள்வதில்தான் எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் இருக்கிறது. நான் என்றும் பெரியார் தொண்டனாகவே இருப்பேன்.
எனக்கும் பெரியாருக்கும் ஒரு வித்தியாசம் இருப்பதை உணரந்துள்ளேன். நான் முதலில் எப்படி கடவுள் இருந்திருக்க முடியும் என்று யோசித்தேன். மனிதர்கள் பல லட்ச ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக சொல்கிறார்கள். ஆனால், எல்லா மதமும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியுள்ளன. அதை வைத்துப் பார்த்தால் மனிதர்கள்தானே கடவுளை உண்டாக்கி இருக்க முடியும். கடவுகள், மனிதனைப் படைத்திருக்க முடியாதுதானே. அப்படித்தான் நான் கடவுள் மறுப்பை முன்னெடுத்தேன்.
ஆனால் பெரியாரோ, முதலில் எல்லா மனிதர்களும் சமம், ஆணும் பெண்ணும் சமம் என்றார். சாதிகள் இல்லையென்று பிரசாரம் செய்தார். அப்போது பலர், ‘சாதியை விட முடியாது, அது மதத்தை சிதைத்து விடும்' என்றனர். அப்போது மதத்தை ஒழியுங்கள் என்றார். மதத்தை ஒழித்தால் கடவுகளுக்கு ஆபத்து நேரும் என்றார்கள். அப்போது கடவுளும் வேண்டாம் என்றார். அப்படித்தான் பெரியார், கடவுள் மறுப்பை முன்னெடுத்தார்.
பெரியாரின் கோட்பாடுகளும், அவரின் தொண்டர்களும் இன்றளவும் வீரியமாக செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான் பெரியாரின் பெரயைக் கேட்டாலே பலர் அலறுகிறார்கள்,” என்று நகைச்சுவை கலந்து பேசினார்.