This Article is From Sep 17, 2018

காலங்கள் கடந்து நிற்கும் 'தன்னிகரற்ற தலைவர்' பெரியாரின் சிந்தனைகள்! #பெரியார்140

மறைந்த ஈ.வெ.ரா பெரியார் அவர்களின் 140வது பிறந்தநாள் இன்று!

காலங்கள் கடந்து நிற்கும் 'தன்னிகரற்ற தலைவர்' பெரியாரின் சிந்தனைகள்! #பெரியார்140

மூத்த அரசியல் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆன மறைந்த ஈ.வெ.ரா பெரியார் அவர்களின் 140வது பிறந்தநாள் இன்று!

பெரியார் என்றாலே நம்மில் பலருக்கும் நினைவிற்கு வருவது அவரது 'கடவுள் எதிர்ப்பு' கொள்கைகள் மட்டுமே. ஆனால், கடவுளை விடவும் அவர் அதிகம் எதிர்த்தது சாதியையும், பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளையும் தான். தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் கூட, கோயில்களுக்குள் சாதி அடிப்படையிலான தீண்டாமை இருக்கக்கூடாதென போராடியவர். இன்று சாதி பாகுபாடின்றி கடவுள் நம்பிக்கை இருக்கும் எல்லோரும், கோயிலுக்குள் சென்று வழிபட அன்றே தீர்வு கண்டவர் பெரியார்.

'மதத்தை கடவுள் உருவாக்கினார், அந்த மதம் உயர்சாதி கீழ்சாதி எனும் தீண்டாமையை ஆதரிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மதமும், கடவுளும் தேவையா?’ என்பதே பெரியார் அவர்களின் வாதம். அடிகளாருடனான ஒரு விவாதத்தில், 'உங்களுடைய எந்த கடவுளும் மதமும் சாதியை ஒழிக்கவில்லையே’ என பெரியார் சொன்னார். அதற்கு 'எந்த சாதியையும் கடவுள் உருவாக்கவில்லையே’ என அடிகளார் பதில் சொல்ல, 'ஆனால், உங்கள் கடவுள் அதை தட்டியும் கேட்கவில்லையே’ என கேள்வி கேட்டார்.

தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, நாத்திகத்தை யாரிடமும் கட்டாயப்படுத்தாத உயர்வான பண்பு அவரிடம் இருந்தது. ஒரு முறை, தான் நடத்தி வந்த அனாதைகள் இல்லத்தில் பெரியாரை சந்திக்க நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் வந்திருந்தார். அப்பொழுது அந்த குழந்தைகள் கடவுள் வாழ்த்து பாடுவதை கவனித்த சுந்தரவடிவேலு, 'இவர்களை மட்டும் கடவுள் வாழ்த்து பாட வைக்கிறீர்களே... அது எப்படி சரியாகும்?’ என பெரியாரிடம் கேட்டார். 'சோறு போட்டு வளர்க்கிறேன் என்பதற்காக, இந்த அனாதை குழந்தைகள் தலையில் நாத்திகத்தை திணிக்க மாட்டேன். வளர்ந்ததும், அவர்களே படித்துத் தெரிந்துகொள்ளட்டும்’ என விளக்கினார்.

சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பை தாண்டி மூட நம்பிக்கைகள் எனும் இருளை ஒழித்திட தொடந்து குரல் கொடுத்தது, பெண்களின் கல்விக்காகவும் சம உரிமைக்காகவும் போராடியது, உடன்கட்டை ஏறுதல், வரதட்சணை கொடுமைகள், பலதார மணம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான நடைமுறைகளை நிறுத்த போராடியது என அவர் செய்த தொண்டுகள் அளப்பரியது.

நாடெங்கிலும் எல்லா மாநிலத்தவரும் தங்கள் பெயருக்கு பின்னால் மேனன், நாயர், அகர்வால், ரெட்டி, ஷெட்டி, ஷர்மா, வர்மா என்றெல்லாம் தங்களது சாதிப் பெயர்களை செருக்கோடு சேர்த்து திரிய, இன்றளவிலும் பெரும்பாலான தமிழ் மக்கள் சாதியை தவிர்த்தே தங்கள் பெயரை எழுதுவர், சாதியை சொல்லாமல் தான் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வர். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திற்கும் அல்லாத, நம்முடைய இந்த பெருமைக்கு காரணம் அந்த வெண்தாடி கிழவன்! 'சாதி என்பது அடையாளம் அல்ல, அவமானம்' என்கிற எண்ணத்தை நம்மையும் அறியாமலே நமக்குள் விதைத்தவர் பெரியார். வடமாநிலங்களைப் போலன்றி, இந்து முஸ்லீம் கிறித்துவர்கள் எல்லோரும் இங்கே அவ்வளவு ஒற்றுமையாய் அன்போடு இருப்பதற்கான விதையை தூவியவரும் அவரே!

தன் வாழ்நாள் முழுக்க, பல்வேறு மேடைகளிலும் கூட்டங்களிலும் பேசிய பெரியார் அவர்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்துக்கள்! 50, 60 வருடங்களுக்கு முன் தந்தை பெரியார் அவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இன்றும் கூட அப்படியே பொருந்துகிறது. அரசியல் அராஜகங்கள், சாதி மத பிரிவினை, பிறப்பு-சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு, கார்ப்பரேட் முதலாளித்துவ அயோகியாத்தனங்கள், சொந்தக்காலில் நிற்க உதவாத பட்டப்படிப்புகள் என எல்லாமே இன்றைய சூழலுக்கென்றே எழுதி வைத்ததைப் போல் உள்ளது!

அவற்றில் சில இதோ உங்களுக்காக:

'நமது கல்விமுறை மாற வேண்டும். படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயில வேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறுத்தினாலும், அவன் தொழில் செய்து பிழைக்ககூடியவனாக இருக்கவேண்டும். மக்கள் அத்தனைபேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும்.'

'தொழிலாளிகளை மோசம் செய்யும் முதலாளிகளின் செயல்கள் யாவும் தொழில் திறமையாகவும், நிர்வாகத் திறமையாகவும் கருதப்படுகிறது; முதலாளியைத் தொழிலாளி ஏமாற்றுவது நாணயக் குறைவானது, நம்பிக்கைத் துரோகமானது, திருட்டுக்குற்றத்தில் சேர்ந்தது என்பதாக ஆகிவிடுகிறது. இதற்கு காரணம் எல்லாவித முதலாளிமார்களின் ஆட்சி வலுத்திருப்பதுதான்.'

'தந்திரகாரனுக்கும் அயோக்கியனுக்கும் மட்டும் தான் ‘ஜனநாயகம்’ என்கிற பித்தலாட்டச் சொல் பயனளிக்கும். போக்கற்ற ஆளுக்கெல்லாம், பித்தலாட்ட வாழ்வு கோஷ்டிக்கெல்லாம் பிழைக்கும் வழி – ஜனநாயகம்தான்!'

'நம் உத்தியோகஸ்தர்கள் பணி கிடைக்கும் வரை ‘நான் தமிழன்’, ‘தமிழன்’ என்று உரிமை கொண்டாடி, வேலை கிடைத்ததும் பதவி சொகுசில் தன்னை வேறு சாதியனாகக் காட்டிக்கொண்டு, தான் இன்னும் மேலே போவதற்காக உண்மையில் வேறு சாதியாளாகவே ஆகிவிடுகிறார்கள்.'

‘வேதங்கள் எல்லாம் தெய்வ வாக்கு’ என்று கூறுவதற்கு வெறும் குருட்டு நம்பிக்கையும், நிர்பந்தமுமே ஆதாரமாக இருக்கின்றனவே ஒழிய, எவ்வித ருசுவோ, பிரத்தியட்சப் பிரமாணமோ ஒன்றும் இல்லை.'

'நமது நாட்டில் சாதிக்கொடுமையும், பிறவியினால் உயர்வு – தாழ்வு என்னும் அகங்காரமும் உடனே தொலையவேண்டியது அவசியமாகும். இக்கொடுமைகளை ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டே தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நன்மையையே பெரிதும் கவனிப்பதுபோல் நடித்து நீலிக்கண்ணீர் விடுவது, தன் மனசாட்சி அறிய செய்யும் அக்கிரமமே அன்றி வேறல்ல.'

'ஜோசியன், மந்திரவாதி, சாமியாடி, அர்ச்சகன், வைத்தியன் ஆகிய ஐவரும் ‘பித்தலாட்ட வாழ்வு’ என்னும் ஒரு மரத்தின் வெவ்வேறு கிளையில் காய்த்த காய்கள். அர்ச்சகன், மாந்திரிகன், ஜோதிடன் – இவர்களைவிட உலகில் பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது.'

'மதமானது இன்று உலகில் மனித சமுதாயத்தின் வாழ்வைத் துக்கமயமாக்கி, ஜீவராசிகளில் மனிதனுக்கென்றுள்ள பகுத்தறிவை அடிமையாக்கி, ஒற்றுமையைக் குலைத்து மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்து வருகின்றது.'

பெரியார் எனும் அந்த ஒப்பற்ற தலைவன் மறைந்துவிட்டாலும், அவரது கொள்கைகளும் அவர் ஊட்டிய பகுத்தறிவும் என்றென்றும் அரணாய் நின்று நம்மை காக்கும்!

.