புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நீண்ட ஆண்டுகளாக பெரியார் சிலை உள்ளது. மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால், இந்த சிலை தேர்தல் விதிமுறைப்படி துணியால் மூடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, பெரியார் பொதுவான தலைவர் என்பதால் அவரது சிலை மூடப்பட வேண்டிய தேவை இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி துணியால் மூடப்பட்டிருந்த பெரியார் சிலையை கடந்த 3 நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகள் அகற்றினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை பெரியார் சிலையின் தலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் தகவல் அறிந்த காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்பி செல்வராஜ் சம்பவ இடத்தில் விசாரனை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் நேரத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் சிலையை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.