This Article is From Jul 17, 2020

“சுய மரியாதை அற்ற அதிமுக அரசு!”- பெரியார் சிலை அவமதிப்பு; தமிழக அரசை சாடும் கனிமொழி

“தான் இறந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரியார்தான் இங்கு பேசு பொருளாக இருக்கிறார்"

Advertisement
தமிழ்நாடு Written by

"அவர் ஒரு சிலை அல்ல. சுய மரியாதைக்கும் சமூக நீதிக்குமான பாதை"

Highlights

  • கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது
  • நேற்றிரவு பெரியார் சிலைக்குக் காவிச் சாயம் பூசப்பட்டுள்ளது
  • இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை

கோயம்புத்தூரின் சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக அரசை சாடியுள்ளார். 

நேற்றிரவு அடையாளம் தெரியாதவர்களால், ஆள் அரவமற்ற நேரத்தில் இப்படி பெரியார் சிலைக்குக் காவிச் சாயம் பூசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலை இது குறித்த செய்தி வேகமாக பரவியது. அதைத் தொடர்ந்து கோவையில் உள்ள திராவிடர் கழகத்தினர், திமுக மற்றும் மதிமுகவினர், பெரியார் சிலைக்கு அருகில் கூடினர். அவர்கள் காவிச் சாயம் பூசியவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அங்கு வந்த போலீஸ் அவர்களை கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தியது. 

இன்று காலை பெய்த மழையால் பெரியார் சிலை மீது பூசப்பட்டிருந்த காவிச் சாயம் அகன்றது. மீதமிருந்த காவிச் சாயத்தை கூடியிருந்த தொண்டர்கள் சுத்தப்படுத்தினர். 

Advertisement

கனிமொழி, இவ்விவகாரம் பற்றி, “தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு,  தந்தை பெரியாரை அவமதிப்பதை பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

அவர் மேலும், “தான் இறந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரியார்தான் இங்கு பேசு பொருளாக இருக்கிறார். அவர் ஒரு சிலை அல்ல. சுய மரியாதைக்கும் சமூக நீதிக்குமான பாதை. அவருக்கு காவிச் சாயம் பூசியவர்களுக்கும் அவரே வழி காட்டுகிறார்,” எனக் ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். 

Advertisement

இச்சம்பம் பற்றி தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “இது ஒரு ஈனச் செயல். இப்படிப்பட்ட செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கறாரான நடவடிக்கைப் பாயும். இது ஒரு ஜனநாயக நாடு. இங்கு அனைத்து தலைவர்களும் பின்பற்றப்படுவதற்கு உரிமையுண்டு. தங்கள் எதிர்ப்பைக் காட்ட வன்முறையை யாரும் கையில் எடுக்கக் கூடாது,” என்று எச்சரிக்கை விடுத்தார். 

Advertisement