This Article is From Dec 08, 2018

காவிரி ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

காவிரி மேலாண்மை வாரியத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாரபட்சமாக செயல்படுகிறார் என்று தமிழக அரசு தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆணையத்திற்கு நிரந்தர  தலைவரை  நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

காவிரி மேலாண்மை வாரியத்தின் இடைக்கால தலைவரை நீக்கி விட்டு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், நீரை பங்கீடு செய்துகொள்வது தொடர்பாக செயல்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காவிரி நதிநீருடன் தொடர்புடைய தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

மத்திய அரசின் நடவடிக்கையின் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகம், காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூருவிலும் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று, காவிரி மேலாண்மை வாரியத்திற்கென்று தனி தலைவர் நியமிக்கப்படவில்லை.

மாறாக, மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரான மசூத் உசைன் மேலாண்மை வாரியத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை மாற்றக்கோரி தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அநத மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தின் இடைக்கால தலைவரான உசேன் இரட்டை பதவி வகிக்கிறார். பாரபட்சமாகவும் செயல்படுகிறார். எனவே அவருக்கு பதிலாக முழுநேரமாக செயல்படும் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவை நீதிமன்றம் மத்திய நீர்வளத்துறைக்கு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

.