புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி: முதல்வர் நாராயணசாமி
ஹைலைட்ஸ்
- புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும்
- காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி
- எனினும், அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனிடையே, மூன்றாவது கட்ட ஊரடங்க நீட்டிப்பின் போது, மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு நெறிமுறைகளில் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு கடந்த மே.7ம் தேதி முதல் மீண்டும் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. எனினும், புதுச்சேரி அரசு மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்காமல் இருந்தது. இதனால், வரலாற்றிலே இல்லாத வகையில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து விவாரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் மதுக்கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என்றும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி தெரிவித்துள்ளார். மது விற்பனைக்கு மட்டுமே அனுமதி; அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் பேருந்துகள் தனிமனித இடைவெளியுடம் இயக்கவும், அனைத்து வணிக வளாகங்களும், தொழிற்சாலைகளும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி,. மே 31-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடரவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் குணமடைந்துள்ளனர்.