தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22, 23 ஆம் தேதிகளில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி, தருண் அகர்வால் தலைமையில், குழு ஒன்றை அமைத்து ஆறு வார காலத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, தூத்துக்குடி கலவரம் குறித்து சிபிஐ விசாரணை சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், மே 22-ல் நடந்த கலவரத்தின் போது, ஜஸ்டின் என்பவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். அவர் கடந்த 5 மாதங்களாக கோமாவில் இருந்து வந்தார். ஜஸ்டினுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஜஸ்டின் இறப்பு மூலம், தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)