This Article is From Jun 03, 2019

''ஜல்லிக்கட்டின்போது மாடுகள் தாக்கப்படுகின்றன'' : மீண்டும் பிரச்னையை கிளப்பும் பீட்டா!!

ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாட்டின் வால் கடிக்கப்படுவதாகவும், முறுக்கப்படுவதாகவும் பீட்டா குற்றம்சாட்டியுள்ளது. இதேபோன்று மூக்கணாங்கயிறு மாடுகளின் மூக்கில் இறுக்கிக் கட்டப்படுவதால் மூக்கில் ரத்தம் வடிவதாகவும் பீட்டா கூறியுள்ளது.

''ஜல்லிக்கட்டின்போது மாடுகள் தாக்கப்படுகின்றன'' : மீண்டும் பிரச்னையை கிளப்பும் பீட்டா!!

ஜல்லிக்கட்டு போட்டியால் மாடுகளுக்கு நிரந்தர காயம் ஏற்படுவதாக பீட்டா தெரிவித்துள்ளது.

New Delhi:

ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகள் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி புதிய பிரச்னையை பீட்டா கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக பீட்டா தரப்பில் 73 பக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகள் தாக்கப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு பெரும் போராட்டங்களுக்கு பின் முறியடிக்கப்பட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. 

இந்த நிலையில் மாடுகள் எவ்வாறு  தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகின்றன என்பது குறித்த 73 பக்க ஆய்வறிக்கையை பீட்டா தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகளின் வால்கள் கடிக்கப்படுவதாகவும், முறுக்கப்படுவதாகவும், கூட்டத்தை நோக்கி வேகமாகச் செல்வதற்காக மூக்கணாங்கயிறு வெடுக்கென இழுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு மூக்கணாங்கயிறை இழுக்கும்போது, மாடுகளுக்கு காயம் ஏற்படுவதாக பீட்டாவின் ஆய்வறிக்கை கூறுகிறது. பதற்றத்திற்கு ஆளான மாடுகள் பார்வையாளர்கள் பக்கம் பாய்ந்து அவர்களை தாக்குவதாகவும், இதில் சிலர் உயிரிழக்க நேரிடுவதாகவும் பீட்டா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

மிருகவதை தடுப்புச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) 2017-ன்படி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட்டதற்கு பின்னர்  பொதுமக்கள் 42 பேர், காளைகள் 14 மற்றும் ஒரு பசு ஆகியவை உயிரிழந்திருப்பதாக பீட்டா குற்றம் சாட்டியுள்ளது. 

இதுகுறித்து பீட்டாவின் இந்திய பிரிவு தலைமை செயல் அதிகாரி மணிலால் வல்லியாட்டி கூறுகையில், 'நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களும், மாடுகளும் ஜல்லிக்கட்டில் உயிரிழப்பது தெரியவந்துள்ளது. வேண்டுமென்றே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்கு மாடுகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன. நாகரிமுள்ள,  முற்போக்கு சிந்தனையுள்ள சமூகத்தில் ஜல்லிக்கட்டு போன்ற ஆபத்தான விளையாட்டுகள் தேவையற்றது. இதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என்று பீட்டா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது' என்றார். 
 

.