This Article is From May 04, 2020

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்: கமல்ஹாசன் கண்டனம்

ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றும் செயல் எனத் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டணம் தெரிவித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்: கமல்ஹாசன் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்: கமல்ஹாசன் கண்டனம்

ஹைலைட்ஸ்

  • மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் - கமல் கண்டனம்
  • இதனால் விலைவாசி மேலும் உயர வாய்ப்புள்ளது.
  • அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். 

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஓபெக் நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. கடந்த மே 1ம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 26 டாலராகச் சரிந்து விட்டது.

கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் நிலையில், நுகர்வோரான மக்களுக்கு அதன் பயன் கிடைக்காத வகையில் மத்திய அரசு கடந்த மார்ச் 14 ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது. இதன் மூலம் மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.22.98, டீசலுக்கு ரூ.18.83 கலால் வரியாக வசூலிக்கிறது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மத்திய அரசு போலவே தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியுள்ளது.  

அதன்படி, பெட்ரோலுக்கு மதிப்புக் கூட்டு வரி 28 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடு ஆகவும், டீசலுக்கு 20 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடு ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பெட்ரோல் விலை 3 ரூபாய் 25 பைசாவும், டீசல் விலை 2 ரூபாய் 50 பைசாவும் உயர்ந்துள்ளது.

தமிழக அரசு திடீரென பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியதால்,  விலைவாசி மேலும் உயர வாய்ப்புள்ளது. கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றும் செயல் எனத் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டணம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்புக் கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதைச் செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

.