Mumbai: உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில், ‘பாரத் பந்த்’ நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கப்படும் ஊராக உருவெடுத்துள்ளது மகாராஷ்டிராவின் பர்பானி.
பர்பானியில் ஒரு லிட்டர் பெட்ரோல், 89.97 ரூபாய்க்கு இன்று விற்கப்பட்டு வருகிறது. இது தான் நாட்டிலேயே பெட்ரோலுக்காக கொடுக்கப்படும் அதிகபட்ச விலையாகும். பர்பானியில் ஒரு லிட்டர் டீசல் 77.92 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மகாராஷ்டிராவின் மற்ற இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 88 ரூபாய்க்கும், டீசல் 76 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பாரத் பந்தை ஒட்டி நேரநடியாக களத்தில் இறங்கியுள்ள நிலையில், சிவ சேனாவும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறது.
ராஜ் தாக்ரே-வின் எம்.என்.எஸ் கட்சியும் மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகிறது.
மகாராஷ்டிராவில் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்துகள், புறநகர் ரயில்கள் ஆகியவை வழக்கம் போல இயங்கி வருகின்றன. ஆனால், பல இடங்களில் கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. இதனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.