This Article is From Dec 16, 2018

தீவிர புயலாக வலுப்பெறும் பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல், தீவிர புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிர புயலாக வலுப்பெறும் பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல், தீவிர புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தை நோக்கி நகரத் தொடங்கியது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு பெய்ட்டி என பெயரிடப்பட்டுள்ளது. அடுத்து 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,

தென்மேற்கு வங்ககடல் பகுதியில் பெய்ட்டி புயல் தற்போது சென்னைக்கு சுமார் 410 கி.மீ.தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் இது மேலும் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

மேலும் இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திராவின் மசூலிப்பட்டினம் - காக்கிநாடா இடையே நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வடதமிழகத்தின் கடலோர மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தரைக் காற்றானது மணிக்கு 45 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுவதால், மீனவர்கள் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சென்னையை பொறுத்தவரையில் தற்போது இருப்பது போல், மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

.