ஹார்லி பைக்கில் தலைமை நீதிபதி பாப்டே; ட்விட்டரை கலக்கும் புகைப்படம்!
New Delhi: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏஸ்.ஏ.பாப்டே ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது. 64 வயதான தலைமை நீதிபதி சூப்பர் பைக் காதலர் என்று கூறப்படுகிறது. அவர் கடந்த காலங்களில் தான் புல்லட் வைத்திருந்தது குறித்தும் பேசியுள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம் ட்விட்டரில் வைரலாகி அந்த புகைப்படத்தில், அவர் ஹார்லி டேவிட்சன் CVO 2020 மாடல் பைக்கில் அமர்ந்திருந்திருந்தார்.
அந்த புகைப்படம் தலைமை நீதிபதியின் சொந்த ஊரான நாக்பூரில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் தற்போது அங்கு தான் இருந்து வருகிறார்.
இந்த புகைப்படம் சில எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர், தலைமை நீதிபதி முகக்கவசம் அல்லது ஹெல்மெட் அணியவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் 2019ல் தலைமை நீதிபதியாக பாப்டே பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, வந்த பல பேட்டிகளில் அவர் தனக்கு பைக் மீது உண்டான காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோல், ராட்சத பைக் ஒன்றை ஓட்டி பார்க்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் சில நாட்கள் நீதிமன்றம் வராமல் இருந்து வந்தார்.
அயோத்தி கோவில் வழக்கு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கிய தலைமை நீதிபதி, தற்போது கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறார்.
அண்மையில், கொரோனா தொற்று சமயத்தில் நீதிபதிகள் கறுப்பு அங்கி அணிவதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய அவர், வெள்ளை சட்டை மீது கழுத்து பட்டை மட்டும் அணியவும் வலியுறுத்தினார்.
ரத யாத்திரைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அண்மை வழக்கில் நீதிபதி ஏஸ்.ஏ.பாப்டே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறினார். மேலும், ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கினால், அந்த பகவான் ஜெகநாதரே தங்களை மன்னிக்க மாட்டார் என்றும் கூறினார்.
பின்னர், தீர்ப்பை மறுஆய்வு செய்யும் படி வலியுறுத்தியதை தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவுடன், கடும் கட்டுபாடுகளுடன் ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.