ஜனவரி 27-ம்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு நிகழ்வை தமிழில் நடத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக அரசின் தலைமை செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தஞ்சை பெரிய கோயில் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் வரும் 27-ம்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5-ம்தேதி குட முழுக்கு நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனை தமிழில் நடத்த வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செந்தில் நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், தஞ்சை பெரிய கோயில் என்பது தமிழரின் அடையாளம். எனவே இங்கு நடைபெறும் குடமுழுக்கு தமிழில் தான் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு, அதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
முன்னதாக உயர் நீதிமன்றம் விழுப்புரம் மாவட்டம் ஸ்ரீ சுந்தரர் கோயிலின் குடமுழுக்கை தமிழில் நடத்த உத்தரவிட்டிருந்தது. இதனை செந்தில் நாதன் தனது மனுவில் மேற்கோள் காட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவிந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு, இதுதொடர்பாக வரும் 27-ம்தேதிக்குள் பதில் அளிப்பதற்கு தமிழக அரசின் தலைமை செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தஞ்சை பெரிய கோயில் நிர்வாகத்தினர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.
முன்னதாக திருமுருகன் என்பவர் இதே விவகாரம் தொடர்பாக வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், ‘பெரிய கோயில் சைவ ஆகம விதிப்படி ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. விதிப்படிஇங்கு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும். இந்த விதி மீறப்பட்டதால், பெரிய கோயிலில் விபத்துகள் நடந்தன. 1997-ல் கோயில் குடமுழுக்கில் தீ விபத்து ஏற்பட்டு பலர் இறந்தனர். அதே ஆண்டில் ஏர்வாடி மற்றும் கும்பகோணத்திலும் தீ விபத்து நடந்தது.
தமிழுக்கு மாற்றமாக சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தினால் ஆகம விதிகள் மீறப்பட்டபோது நிகழ்ந்த விபத்துகள் போன்று நடக்குமோ என மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5-ம்தேதி குடமுழுக்கு நடக்கிறது. இதையொட்டி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.