தரிசனத்துக்குப் பிறகு பக்தர்களை கோயிலுக்கு அருகிலிருந்து சீக்கிரமே அப்புறப்படுத்தும் திட்டம் இருப்பதாக தெரிகிறது
Thiruvananthapuram: சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், கோயில் தரிசனத்தின் போது, பெண்கள் தனி வரிசையில் அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், ‘சபரிமலை கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ய 8 முதல் 10 மணி நேரம் வரை வரிசையில் காத்து தான் இருக்க வேண்டும். அங்கு பெண்களுக்குத் தனி வரிசை கொடுக்கப்படாது. அது சாத்தியப்படாத விஷயம். அதிக நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய நினைக்கும் பெண்கள் மட்டுமே வர வேண்டும். பெண்களுக்குத் தனி வரிசை கொடுத்தால், அவர்கள் குடும்பத்திடமிருந்த பிரிக்கப்படுவார்கள். அது பல பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், தேவஸ்வம் போர்டு தொடர்புடைய அதிகாரிகளை இன்று சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். அதன்படி, சபரிமலையில் தரிசனத்துக்கு வரும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிகிறது.
பெண்களுக்கென்று தனி கழிவறை, சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவது, பெண் போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது உள்ளிட்டவையை இந்த ஆண்டு முதல் கேரள அரசு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.