This Article is From Aug 27, 2018

வெள்ள நிவாரண நிதியாக ஒரு மாத ஊதியம்: கேரள முதல்வரின் வேண்டுகோளுக்கு பெரும் வரவேற்பு

ஏசியாநெட் தொலைக்காட்சி வாயிலாக பிணராயி விஜயன் நேற்று விடுத்த இவ்வேண்டுகோள் சமூக வலைத்தளங்களில் விரைந்து பரவி வருகிறது

வெள்ள நிவாரண நிதியாக ஒரு மாத ஊதியம்: கேரள முதல்வரின் வேண்டுகோளுக்கு பெரும் வரவேற்பு

தங்களது ஒரு மாத ஊதியத்தை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்குமாறு கேரள முதல்வர் பிணராயி விஜயன் விடுத்த வேண்டுகோளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

“மாநிலத்தின் முதல் குடிமகன் என்கிற முறையில் முதல்வரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு எனது ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை தலைமைச் செயலரிடம் அளிக்க முடிவு செய்துள்ளேன்” என்று கேரள ஆளுநரும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான சதாசிவம் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மேலும் 2,50,000 ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கினார்.

ஏசியாநெட் தொலைக்காட்சி வாயிலாக பிணராயி விஜயன் நேற்று விடுத்த இவ்வேண்டுகோள் சமூக வலைத்தளங்களில் விரைந்து பரவி வருகிறது. விருப்பமுள்ளவர்கள் பத்து மாத காலத்தில் தங்களது ஒரு மாத ஊதியத்தொகையை நிவாரண நிதியாக வழங்கலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார்.

“ஏற்கனவே ஒரு இலட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்திருக்கிறேன். அடுத்த மாத சம்பளம் கிடைத்ததும் அதையும் முதல்வர் கூறியபடி நிவாரண நிதிக்கு வழங்கப்போகிறேன்” என்று அட்வகேட் ஜெனரல் சுதாகர பிரசாத் கூறியுள்ளார்.

ஒரே தவணையில் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்க இருப்பதாக கேரள காவல்துறைத் தலைவர் லோக்நாத் பேஹ்ரா அறிவித்துள்ளார். தனது துறையைச் சேர்ந்த சகாக்கள் பலரும் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்க உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனும் இதே முடிவை எடுத்துள்ளார். “ஆனால் மாநில அரசு தனது படோடாபங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொச்சி மெட்ரோ தலைவரான மொகம்மது ஹனீஷ், பிற அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரும் ஒரு மாத ஊதியத்தை வழங்க உறுதியளித்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் பலரும் முதல்வரின் கோரிக்கையை வரவேற்றுள்ளனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.