Uzice, Serbia: செர்பியா: கடந்த 1999- 2015 - ஆம் ஆண்டுகளின் இடைவெளியில், 380க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை இண்டெர்போல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உயர் தர நகை கடைகளை குறி வைத்து, 334 மில்லியன் யூரோ மதிப்புள்ள கொள்ளை பணத்தை திருடி சென்ற கும்பல் தற்போது பிடிப்பட்டுள்ளனர். 'பிங்க் பந்தர்' என்று அழைக்கப்படும் இந்த பயங்கர கொள்ளையர்கள் செர்பியாவில் பிடிபட்டுள்ளனர்.
கடந்த 2003 - ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் உள்ள நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளயைர்கள் கண் இமைக்கும் நேரத்தில் 350,000 யூரோ மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல் துறையினரால் பல ஆண்டுகள் கடந்த பின்பும், கொள்ளை கும்பலை கண்டுப் பிடிக்க முடியவில்லை.
கடந்த 2013 - ஆம் ஆண்டு, தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழு, இவர்களின் ரத்த மாதிரியை பரிசோதித்ததில், கொள்ளை கும்பலை சேர்ந்த இரண்டு நபர்களின் விவரங்களை கண்டறிந்தனர். ரத்த மாதிரியின் டி.என்.ஏ ஆய்வு மூலம், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செர்பியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
41 - வயதான சைகா, போக்கா என்ற இருவரை கைது செய்த காவல் துறையினர், மேலும் இரண்டு குற்றவாளிகளையும் பிடித்துள்ளனர். செர்பியாவின் உசிஸ் பகுதியை சேர்ந்த இந்த திருடர்கள், தொடர்ந்து பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.