Read in English
This Article is From Jun 11, 2020

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்த திட்டம் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா?

Advertisement
தமிழ்நாடு Posted by

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்த திட்டம் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்த திட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் அடுத்தடுத்த கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும், 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா எண்ணிக்கை குறைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. எனினும், சென்னையில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இதையடுத்து சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதின் மூலம் சென்னையின்  மற்ற இடங்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே முறையான முன்அறிவிப்பு செய்து அதன் பிறகு 7 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் காணொளி காட்சி மூலம் விசாரித்து முடித்த பின், தமிழக அரசின் அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், சில கேள்விகள் எழுப்பினர். 

Advertisement

சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக, நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கு எதையும் எடுக்கவில்லை எனவும், தமிழக குடிமக்கள் என்ற முறையிலும், பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இக்கேள்வியை எழுப்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

Advertisement

இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து நாளை விளக்கம் அளிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Advertisement