This Article is From Jan 23, 2019

‘அடுத்த மாதம் புதுச்சேரியில் முதலீட்டாளர்கள் மாநாடு!’- நாராயணசாமி அதிரடி

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.

‘அடுத்த மாதம் புதுச்சேரியில் முதலீட்டாளர்கள் மாநாடு!’- நாராயணசாமி அதிரடி

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஹைலைட்ஸ்

  • இன்று தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்குகிறது
  • முதல்வர் பழனிசாமி மாநாட்டை தொடங்கி வைத்தார்
  • அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளார்

சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று பிரமாண்டமான முறையில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக புதுச்சேரியிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அதரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு நாள் அன்று ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 2-வது முறையாக அம்மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்க 2,900 முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். நிறைவு நாள் விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்க உள்ளார். மொத்தமாக 2 நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இதற்காக 3 முறை அமைச்சரவையும் கூடி முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதியும், 2-வது அமைச்சரவை கூட்டம் இம்மாதம் 3-ந் தேதியும் நடந்து முடிந்த நிலையில், 30 தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ‘ஜெயலலிதா அவர்களால் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி வைக்கப்பட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாக அதிமுக அரசு சொல்கிறது. அப்படி வந்தால் மகிழ்ச்சி. நாங்கள், எங்கள் மாநிலத்தில் அடுத்த மாதம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்று கூறினார். 
 

.