இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12,759 ஆக உயர்ந்துள்ளது.
ஹைலைட்ஸ்
- பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா பாதித்தவர்களை குணப்படுத்த முயற்சி
- சோதனை முயற்சி சில நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளது
- பிளாஸ்மா சிகிச்சைக்கு ஐ.சி.எம்.ஆர். இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை
New Delhi: டெல்லியில் இன்னும் ஓரிரு நாட்களில் கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை, சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்படும் என்றும், இது வெற்றிகரமாக முடிந்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு 1,578 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'இன்னும் சில நாட்களில் சோதனை முயற்சியாக பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படும். இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தால் பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்படும்' என்று தெரிவித்தார்.
பிளாஸ்மா சிகிச்சை முறையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களிடம் இருந்து பிளாஸ்மா பெறப்பட்டு பாதிக்கப்பட்டோர் உடலில் செலுத்தப்படும். இந்த சிகிச்சை முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
முன்னதாக ஸ்பேனிஷ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எபோலா வைரஸ் தாக்குதல் ஆகியவை நடந்தபோது, ப்ளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டு வெற்றியும் காணப்பட்டது.
கொரோனாவுக்கு பிளாஸ்மா முறையில் சிகிச்சை அளிக்க முடியுமா என உலக நாடுகள் சோதனை நடத்தி வருகின்றன. நமது இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், இரத்த தட்டுகள் ஆகியவை இருக்கும். இதனை தவிர்த்து திரவ நிலையில் இருக்கும் பொருளுக்கு பிளாஸ்மா என்று பெயர். இவை எதிர்ப்பு சக்திகளை கொண்டவைகளாக காணப்படும்.
இவை கொரோனா பாதித்தவரின் உடலுக்குள் செலுத்தும்போது உடல்நிலை முன்னேற்றம் அடைய அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.