நீட், ஜேஇஇ எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த ஜேஇஇ தேர்வு மற்றும் நீட் தேர்வில் பல மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போயினர். தமிழகம் உள்பட பீகார், மகராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் என பல மாநிலங்களில் பல மாணவர்களுக்கு தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், மாநில அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து இதை வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதியின்மை, கொரோனா பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் என பல்வேறு காரணங்களால் தேர்வு எழுத முடியாத மாணவர்கள் இருந்தால், அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை விரைவில் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.