சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக்கூறிய கமல்ஹாசனுக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.
கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், அன்புள்ள கமல், நீங்கள் ஒரு சிறந்த கலைஞன். கலைக்கு எப்படி மதம் கிடையாதோ, அதேபோல் தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது.
கோட்சே ஒரு தீவிரவாதி என நீங்கள் கூறி இருக்கலாம். ஏன் 'இந்து' என குறிப்பிட்டு கூறினீர்கள்?. நீங்கள் வாக்கு கேட்கும் இடத்தில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் உள்ளார்கள் என்ற காரணத்திற்காகவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஒரு மிகச்சிறு கலைஞனாக, ஒரு மாபெரும் கலைஞனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றே. தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள். ஜெய்ஹிந்த் என்று அவர் தெரிவித்துள்ளார்.