New Delhi: நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதற்குப் பிறகான முதல் பாஜக தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தீர்மானத்தில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு லட்டு தந்து வாழ்த்தினார் கட்சித் தலைவர் அமித் ஷா, பிற தலைவர்கள் மாலையிட்டனர்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா, அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங், அனந்த் குமார், நிதின் கட்கரி, மூத்த தலைவர் அத்வானி ஆகிய எழுவரும் மேடையில் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.
வழக்கமாக அனைவரும் அரங்கில் கீழே உள்ள இருக்கைகளில் அமர்ந்திருக்க, அவரவர் பேசும்போது மட்டுமே மேடைக்கு வருவர். தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், இப்போது செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம், ஒற்றைத்தலைமையின் அதிகாரத்திலிருந்து கூட்டுத்தலைமையை நோக்கி பாஜக நகர்வதாகக் காட்டவே எனக் கருதப்படுகிறது.
கட்சித் தலைவர்வளுக்கு இடையேயான ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் மேலும் ஒரு சம்பவமும் நடந்தது. உபியைச் சேர்ந்த பாஜ தலைவரான அசோக் தோஹ்ரே, தலித்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கக் கூடிய சட்டங்களை நீர்க்கச் செய்வதாக பிரதமர் மோடிக்குப் புகார் தெரிவித்து அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இன்றைய கூட்டத்தில், அவர் பிரதமர் மோடியின் காலில் விழுந்து பாதத்தைத் தொட முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய மோடி, வலுவாகத் தட்டிக்கொடுத்தார்.
முன்னதாக, பாஜக கூட்டணியில் இருந்து மார்ச்சில் வெளியேறிய தெலுகு தேசம் கட்சி கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் பிரதமர் மோடி எளிதில் வெற்றி பெற்றார். 12மணி நேர விவாதத்துக்குப் பின்னர் நடந்த வாக்கெடுப்பில் அவையில் இருந்த 451 உறுப்பினர்களில் 325 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.