இந்தோனேசியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய போட்டிகள் 2018-ல் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இது குறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஆசிய போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைச் சந்தித்த பிரதமர் மோடி, பதக்கம் வென்றது குறித்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். வீரர்கள் அதிக அளவில் பதக்கம் வென்றது, இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் கூறினார். மேலும் அவர், வீரர்கள் வெற்றிக்குப் பிறகு தலைக்கணம் அடையாமல், தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். பிரதமர் குறிப்பாக, விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள், தொழில்நுட்பத்தின் உதவிகளைக் கொண்டு தொடர்ந்து அவர்களின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அந்த அறிக்கையில், ‘கிராமப்புறம் மற்றும் சிறிய ஊர்களில் இருந்து வந்து, சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது என்றார் பிரதமர். நாட்டின் கிராமப்புறங்களில் நிறைய திறன் இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறினார். விளையாட்டு வீரர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் குறித்து வெளி உலகுக்குத் தெரியாது என்ற சொன்ன பிரதமர், இந்தப் பதக்கங்களுடன் ஓய்வு பெற்றுவிடக் கூடாது. தொடர்ந்து கடினமாக உழைத்து ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது வீரர்களுடன், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உடனிருந்தார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)