9 மணிக்கு 9 நிமிட ஒளியினை பிரகாசிக்கச் செய்யுங்கள் என பிரதமர் கோரியிருந்தார்.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளியன்று மக்களுக்குக் காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், கொரோனா தொற்று பரவியுள்ள இருளினை அகற்ற 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமை(05-04-2020) இரவு தங்கள் இல்லங்களில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு மேல் மாடங்களில் அகல் விலக்குகளையும், மெழுகுவர்த்திகளையும், அல்லது டார்ச்சு விளக்குகளையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இது கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் முழு முடக்க நடவடிக்கையில் நாம் அனைவரும் இணைந்து இருக்கின்றோம் என்பதைப் பிரதிபலிப்பதாக இருக்கும் என்றும் பிரதமர் காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் ஞாயிற்றுக்கிழமை இரவு விளக்கினை ஏற்றி அதன் அருகிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றியிருந்தார். அதனுடன் சமஸ்கிருத கவிதை ஒன்றினையும் இணைத்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் 93 வயதான பிரதமரின் தாயார் ஹிராபனும் சேர்ந்துகொண்டார். அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து, அகல் விளக்கினை ஏற்றினார்.
தீபாவளி அல்லது இதர பண்டிகை தினம் போல மக்கள் இரவு 9 மணியளவில் பல்லாயிரக்கணக்கில் அகல் விளக்குகளையும், மெழுகுவர்த்திகளையும் ஏற்றி மின் விளக்கினை அணைத்திருந்தனர். பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடிக்கச் செய்து பிரதமரின் கோரிக்கையை நிறைவேற்றி ஆரவாரமாகக் கூச்சலிட்டனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வீடுகளுக்கு வெளியே விளக்குகளை ஏற்றி வைத்தனர். அதே போல முதல்வர்களும், ஆளுநர்களும், பிற அரசியல் தலைவர்களும் விளக்குகளை ஏற்றிய புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். ட்விட்டரில் #IndiaFightsCoronavirus, # 9MinutesForIndia மற்றும் # தீபாவளி என்ற ஹேஷ்டேக்குகள் டிரண்டாயின.
இதேபோல பிரதமர் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் போர் வீரர்களாக இருக்கக்கூடிய மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களை பாராட்டும் விதமாக கைகளைத் தட்டுமாறு கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகக் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 3500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 275 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.