This Article is From Jan 10, 2019

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீண்டும் பதவியிலிருந்து நீக்கம்!

உச்ச நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு பின்னர் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தற்போது பணிக்கு திரும்பினார்

New Delhi:

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை மீண்டும் பதவியிலிருந்து நீக்கம் செய்து நியமனக் குழு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான உயர்மட்டக் குழு மேற்கொண்ட நீண்ட நேர ஆலோசனைக்கு பின்னர் அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சிபிஐ இயக்குனர் பொறுப்புக்கு மீண்டும் திரும்பிய அலோக் வர்மா, இடைக்கால தலைவராக இருந்த நாகேஸ்வர ராவ் மேற்கொண்ட பணியிட மாற்றங்களுக்கு அதிரடி தடையை விதித்து வந்தார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு பின்னர் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தற்போது பணிக்கு திரும்பினார். சிபிஐ-க்குள் அதிகாரப் போட்டி நடந்ததை தொடர்ந்து அலோக் வர்மாவும், துணை இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனாவும் அக்டோபர் 24-ம் தேதி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன்பின்னர் 10-வது மாடியில் செயல்பட்டு வந்த அலோக் வர்மாவின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அக்டோபர் 24-ம்தேதி அதிகாலை 2 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. இதன்பின்னர் அலோக் வர்மாவின் இடத்தில் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டிருந்தார்.

பணியை தொடரலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தபோதிலும் மிக முக்கிய கொள்கை ரீதியிலான முடிவுகளை அலோக் வர்மாவால் எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிபிஐ இயக்குனரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். ஆனால் கட்டாய விடுப்பில் அலோக் வர்மா அனுப்பி வைக்கப்பட்டதால் அதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இதில் அவருக்கு சாதகமான உத்தரவு வெளிவந்தது. எனினும், தேர்வுக்குழு அலோக் வர்மா குறித்த முடிவை எடுத்துக் கொள்ளட்டும் என்று உச்ச நீதிமன்றம் அரசு தரப்புக்கு முடிவை விட்டுவிட்டது. இவரது பதவிக்காலம் ஜனவரி 31ம் தேதி முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அலோக் வர்மா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதாவது இந்த முடிவு 2:1 பெரும்பான்மை முடிவின் படி எட்டப்பட்டுள்ளது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மட்டும் அலோக் வர்மாவை நீக்கும் முடிவை ஏற்கவில்லை என்றும் அவர் இந்த முடிவை ஒத்திப் போட வேண்டும் என்று தெரிவித்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

.