இந்தியா – சவூதி உறவு மரபணுவிலேயே இருப்பதாக சவூதி இளவரசர் கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- இந்தியா - சவூதி உறவு மரபணுவிலேயே உள்ளது : சவூதி இளவரசர்
- பாகிஸ்தானில் 2 நாட்கள் பயணம் சென்றிருந்தார் சவூதி இளவரசர்
- மரபுகளை மீறி விமான நிலையம் சென்று மோடி வரவேற்றார்
New Delhi: சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். ஒரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சல்மானுக்கு டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை அவர் டெல்லிக்கு வந்தார். பாகிஸ்தானில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சல்மான், தெற்காசிய பகுதியில் அமைதியை நிலை நிறுத்துவதில் பாகிஸ்தான் நல்ல முயற்சி எடுத்துவருவதாக பாராட்டு தெரிவித்தார்.
காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில் சல்மானின் பாராட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுகிறது. அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார்.
இந்த நிலையில், சல்மான் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இதில் காஷ்மீர் விவகாரம் குறித்து முக்கியமாக பேசப்படவுள்ளது. இந்திய பயணம் குறித்து கருத்து தெரிவித்த சவூதி இளவரசர், இந்தியாவுக்கும் சவூதிக்கும் இடையிலான உறவு மரபணுவிலேயே இருப்பதாக கூறினார்.
வழக்கமான மரபுகளை மீறி பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு சென்று சல்மானை வரவேற்றார். இன்றைய பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தானின் அடாவடி குறித்து சல்மானிடம் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட உள்ளனர்.