Shri Ram Janambhoomi: 16வது நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி, 1992 ஆம் ஆண்டு இந்து அமைப்பினரால் தரைமட்டமாக்கப்பட்டது
New Delhi: Shri Ram Janambhoomi: உத்தர பிரதேச மாநில, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அறக்கட்டளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
“எனது அரசாங்கம் ஸ்ரீ ராம ஜென்ம்பூமி தீர்த்த ஷேத்ரா என்னும் அறக்கட்டளையை உருவாக்க முடிவெடுத்துள்ளது. இந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கும் அது சம்பந்தமான மற்ற விவரங்கள் குறித்தும் சுதந்திரமாக முடிவெடுக்கும்.
அயோத்தியில் மிகப் பெரும் ராமர் கோயில் கட்டுவதற்கு நாம் அனைவரும் நமது ஆதரவினைத் தருவோம்,” என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சொல்ல, “ஜெய் ஸ்ரீ ராம்” என்னும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கடந்த நவம்பர் மாதம், ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பை அளித்தது. அதன்படி, பிரச்னைக்குரிய இடத்தை ராம் லல்லா தரப்புக்கு வழங்கியது நீதிமன்றம். வழக்கில் இன்னொரு தரப்பான சன்னி வாக்ஃப் அமைப்புக்கு, அயோத்தில் 5 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்கச் சொல்லி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே, அறக்கட்டளை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அயோத்தியில் வாக்ஃப் அமைப்புக்கு, நிலம் வழங்க உத்தர பிரதேச அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
16வது நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி, 1992 ஆம் ஆண்டு இந்து அமைப்பினரால் தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில்தான் தற்போது ராமர் கோயில் அமயவிருக்கிறது. முன்னதாக இந்த வழக்கு குறித்து உத்தரவிட்ட நீதிமன்றம், அறக்கட்டளை அமைக்க மத்திய அரசுக்கு 3 மாதங்கள் காலக்கெடு கொடுத்தது.
இன்னும் 2 நாட்களில் டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இந்த அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் இருக்கிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.