கவர்னர் மாளிகையில் மோடியை சந்தித்து பேசும் மம்தா பானர்ஜி.
Kolkata: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அவரை முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இதற்கிடையே மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
முன்னதாக கொல்கத்தா வந்த பிரதமர் மோடியை கவர்னர் ஜெகதீப் தன்கர், மாநில நகராட்சி அமைச்சர் பிர்காத் ஹகிம், மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் விமான நிலையம் சென்று வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து போராட்டங்கள் நடந்தன.
சனிக்கிழமை மற்றும் ஞாயிறு என 2 நாட்கள் மோடி மேற்கு வங்கத்தில் இருப்பார். நாளை கொல்கத்தா துறைமுக கழகத்தின் 150-வது ஆண்டுவிழா நடைபெறவுள்ளது. இதில் மோடி கலந்து கொள்ளவுள்ளார். இதனை தவிர்த்து இன்னும் சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
மோடியின் வருகையை கண்டித்து விமான நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி இந்த போராட்டங்கள் நடந்தன.
இதேபோன்று மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் மோடியின் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.
மேற்கு வங்க பயணத்தின்போது நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் மோடியும், மம்தா பானர்ஜியும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியுரிமை சட்ட திருத்தத்தை மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். மேற்கு வங்கத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட மாட்டாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
குடியுரிமை சட்டத்தை மேற்கு வங்கம் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.