இந்தியாவுக்கு மாலத்தீவு முக்கியமான நட்பு நாடு என்று மோடி கூறியுள்ளார்.
Male: பிரதமர் ஆன பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக மோடி மாலத்தீவு சென்றுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாலி விமான நிலையம் வந்திறங்கிய அவரை மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் வரவேற்றார். இந்த பயணத்தின்போது வெளிநாட்டு முக்கியஸ்தர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான நிஷான் இஸ்ஸுதீன் விருது மோடிக்கு வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றாக மாலத்தீவு இருந்து வருகிறது. அதனுடனான உறவை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் கடல் எல்லையில் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும்.
மாலத்தீவு பயணம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘மாலத்தீவை மிகவும் முக்கியமான நட்பு நாடாக இந்தியா கருதுகிறது. அந்நாட்டுன் வரலாறு மற்றும் கலாசாரத்தை இந்தியா பகிர்ந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த நவம்பர் மாதத்தின்போது மாலத்தீவு அதிபராக இப்ராகிம் சோலிஹ் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.