சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் பங்கேற்கின்றன.
மக்களவை தேர்தல் தேதி இந்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக – பாமக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுடன் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
சரியாக மாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகிறார். முதலில் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள மேடையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை முழுவதும் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், இந்த கூட்டத்தில் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கப்படுமா?, தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பார்களா போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.