This Article is From Dec 24, 2019

ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றி : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!!

ஜார்க்கண்ட் தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் நன்றி தெரிவித்துக் கொண்டார். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றி : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!!

ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றிக்காக ஹேமந்த் சோரனை வாழ்த்தியுள்ளார் மோடி.

New Delhi:

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜார்க்கண்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் இந்த கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு 25 இடங்கள் கிடைத்துள்ளன. வெற்றியைத் தொடர்ந்து ஜார்க்கண்டின் அடுத்த முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்கவுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியிருக்கிறார்.
 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், 'ஹேமந்த் சோரனுக்கும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார். 

ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி தீவிரமாக செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின்போதும் பல்வேறு இடங்களில் மோடி பிரசாரம் மேற்கொண்டிருந்தார். 

இதேபோன்று, கட்சியின் சார்பாக தீவிரமாக தேர்தல் பணியாற்றியவர்களுக்கும் மோடி வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பாஜக சேவை செய்ய வாய்ப்பளித்தமைக்காக ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி கூறியுள்ளார் மோடி.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக பெற்றுள்ள தோல்வி அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக காங்கிரசிடம் ஆட்சியை பறி கொடுத்தது. 

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றும், வர்த்தக தலைமையகமான மும்பை அமைந்துள்ளதுமான மகாராஷ்டிராவில் பாஜக இந்த ஆண்டு ஆட்சியை பறி கொடுத்துள்ளது. இங்கு அக்கட்சியின் கூட்டணியில் இருந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளது. 

கடந்த ஏப்ரல் - மேயில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக மட்டுமே 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. 

பிரதமர் மோடி ட்வீட் செய்வதற்கு சற்று முன்பாக, உள்துறை அமைச்சரும் பாஜகவின் தேசிய தலைவருமான அமித் ஷா, 'ஜார்க்கண்ட் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளாக சேவை செய்வதற்கு வாய்ப்பு அளித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மாநிலத்தில் பாஜக தனது சேவையை தொடரும். கட்சிக்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார். 

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 37 இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கு இந்த முறை 25 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 

இந்த முடிவுகள் 2014-யை விட முற்றிலும் மாற்றமானவையாக உள்ளது. அப்போது, ஏ.ஜே.எஸ்.யு.வுடன் கூட்டணி அமைத்து பாஜக 42 இடங்களை கைப்பற்றியது. அந்த தேர்தலில் காங்கிரசுக்கு 6 இடங்கள் மட்டும கிடைத்தன. 

முன்னதாக வெற்றி பெற்றது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், மக்கள் தங்களது கூட்டணியை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். 

அவர் தனது நன்றி தெரிவிப்பில், 'மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் காலம் வந்து விட்டது' என்று குறிப்பிட்டிருந்தார். 

.