“மக்கள் பெரும்பான்மை பலம் அளித்தபோதிலும் அவர்களை அதிருப்தி அடைய செய்து விட்டார் மோடி” என்று தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் விமர்சித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் “ஜன சேனா'‘ என்ற அமைப்பை நிறுவி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக என எதனுடனும் நெருங்காமல், தனக்கென ஒரு ஸ்டைலை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறார்.
திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விடை பெறுவதாக அவர் சமீபத்தில் அறிவித்தது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது-
கடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் பெரும்பான்மை பலத்தை அளித்தனர். ஆனால் அவர் மக்களை அதிருப்தி அடைய செய்து விட்டார். காங்கிரஸ் ஏற்கனவே செய்த தவறைத்தான் ஆட்சிக்கு வந்த பின்னர் பாஜகவும் செய்து வருகிறது. இரு கட்சிகளும் மக்களை வதைக்கின்றன.
வட இந்திய அரசியல்வாதிகள் தென் மாநில மக்களின் உணர்வுகளை பிரதிநிதிகள் மூலமாக புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். ஆனால் இது சரியான அணுகுமுறை அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.