This Article is From Jun 02, 2020

'அவசர நிலையை கடுமையாக எதிர்த்தவர்' - கே.என். லக்ஷ்மணனுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

சென்னை மைலாப்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக கடந்த 2001 முதல் 2006 வரை லக்ஷ்மணன் பதவி வகித்தார். அவருக்கு ரங்க நாயகி என்ற மனைவியும், புவனேஸ்வரி என்ற மகளும், சேகர் என்ற மகனும் உள்ளனர். 

'அவசர நிலையை கடுமையாக எதிர்த்தவர்' - கே.என். லக்ஷ்மணனுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

கே.என்.  லக்ஷ்மணன் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் நேற்றிரவு காலமானார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர  நிலையை கடுமையாக எதிர்த்தவர் என்று மறைந்த முன்னாள் பாஜக தமிழக தலைவர் கே.என்.  லக்ஷ்மணனுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,'மரியாதைக்குரிய கே.என். லக்ஷ்மணன் மறைந்தது எனக்கு மிகுந்த துயரத்தை அளித்துள்ளது. அவர் தமிழக மக்களுக்காகவும்,  பாஜகவுக்காகவும் மிகக் கடுமையாக உழைத்தார். அவசர நிலை கால கட்டத்தில் அவர் நடத்திய போராட்டங்கள் என்றென்றும் நினைவுகூறத் தக்கது' என்று மோடி கூறியுள்ளார்.

1975 - 1977 ஆண்டுகளில் 21 மாதங்களுக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசர  நிலை நாட்டில் கொண்டு வரப்பட்டது.  அப்போது எதிர்க்கட்சிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டதுடன், பல்வேறு அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பத்திரிகைகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இருண்டகாலமாக அதனை  சிலர் கூறுகின்றனர்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே.என்.  லக்ஷ்மணன் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 92.

சென்னை மைலாப்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக கடந்த 2001 முதல் 2006 வரை லக்ஷ்மணன் பதவி வகித்தார். அவருக்கு ரங்க நாயகி என்ற மனைவியும், புவனேஸ்வரி என்ற மகளும், சேகர் என்ற மகனும் உள்ளனர். 

லக்ஷ்மணன் தமிழக பாஜக தலைவராக இருமுறை பதவி வகித்தவர். அவர் மறைவுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.  நட்டா, தேசிய செயலாளர் முரளிதர் ராவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஜன சங்கம் முதல் பாஜக வரையில் லக்ஷ்மணன் செய்த சேவை, மக்களுக்கு அவர் செய்த தியாகம் தங்களை ஊக்கப்படுத்தும் என்று நட்டாவும், மிக எளிமையான மனிதர். ஆனால் கொள்கையில் உறுதியானவர். நாட்டுக்காவும், மக்களுக்காவும் அவர் செய்த சேவை அளப்பரியது என்று முரளிதர் ராவும் கூறியுள்ளனர். 

'கல்வித்துறையில் லக்ஷ்மணன் செய்த சேவை குறிப்பிடத்தகுந்தது. 1970-ம் ஆண்டில் என்.பி. வாசுதேவனுடன் இணைந்து  அவர் வித்யா மந்திர் பள்ளியை தொடங்கினார். அன்று 35 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட பள்ளி, இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாணவர்களை கொண்டதாக உள்ளது' என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் வெளியிட்டுள்ளார். 

கே.என். லக்ஷ்மணன் உடலுக்கு பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.  ராகவன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர்  மரியாதை செலுத்தினர்.  

.