கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தொடர்பான ஆடியோ பதிவை ராகுல் காந்தி வெளியிட்டார்.
New Delhi: நாடாளுமன்றத்தில் இன்று ரஃபேல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் விவகார ஊழல் குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை என்று விமர்சித்தார். பயந்து கொண்டு மோடி தனது அறையில் ஒளிந்து கொள்வதாக ராகுல் பேசியதால் நாடாளுமன்றத்தில் இன்று பரபரப்பு காணப்பட்டது.
ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதுதொடர்பான விவகாரத்தில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், முறைகேடு நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியது.
இதனால், ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்திருப்பதை ஆதாரங்களுடன் நிரூபிப்போம் என்று பேசினார்.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை. அவர் தனது அறையில் ஒளிந்து கொள்கிறார். பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அதிமுக எம்.பி.க்கள் பின்னால் மறைந்து கொள்கிறார்'' என்று பேசினார்.
நாடாளுமன்றத்தில் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்ட ராகுல், அது மனோகர் பாரிக்கரின் குரல் என்றும், அவர் ரஃபேல் விவகாரம் குறித்த முக்கிய ஆவணங்களை தனது படுக்கை அறையில் வைத்திருப்பதாகவும் கூறினார்.
இந்த ஆடியோ ஒலிபரப்பப்பட்டபோது, அதுகுறித்து கேள்வி எழுப்பிய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ''இந்த ஆடியோ உண்மையானதுதானா?'' என்று வினவினார்.
ஆடியே விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள கோவா முதல்வரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர், ''விரக்தியடைந்திருப்பதால் வேறு வழியின்றி போலியான ஆடியோக்ளை காங்கிரஸ் கட்சியினர் தயாரித்துள்ளனர்'' என்று கூறியுள்ளார்.
மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதுதான் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.