This Article is From Jan 09, 2019

மக்கள் கருத்தை மதித்து மாநிலங்களவையில் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறும் - மோடி

திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதார நிறைவேறுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது

இடஒதுக்கீடு மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பரப்புவதாக மோடி கூறியுள்ளார்.

Solapur, Maharashtra:

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் மக்கள் கருத்துக்கு மதிப்பு அளித்து மாநிலங்களவையில் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறி விடும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அமளி அதிகமானதைத் தொடர்ந்து அலுவல்கள் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக நேற்று மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இதற்கு 300-க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் பெரும்பான்மை பலத்துடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இன்றைக்கு மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா நிறைவேறி விடும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து மகாராஷ்டிராவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது-

வாய்ப்புகளில் சமத்துவம் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மசோதாவை நிறைவேற்றுவதற்காக மாநிலங்களவை கூடுதலாக ஒருநாள் கூடியிருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய் பேசி வருகின்றன. இவ்வாறு மோடி பேசினார்.

உயர் வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடுஅளிப்பதால் பிராமணர்கள், ராஜபுத்திரர்கள் (தாகூர்கள்), ஜாட், மராத்தாஸ், பூமிகார் மற்றும் சில வர்த்தக பிரிவினர்கள் உள்ளிட்டோருக்கு பலன் கிடைக்கும்

இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதால் நாடாளுமன்றத்தில் உள்ள 2 அவைகளில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.

மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
 

With inputs from PTI

.