பிரதமர் இல்லத்தில் ராணுவ தளபதிகளுடனான ஆலோசனை நடைபெற்றது.
New Delji: பாகிஸ்தானில் இந்திய விமானி சிக்கியுள்ள நிலையில், அவரை மீட்பது குறித்து ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அவரது இல்லத்தில் வைத்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி சிக்கியிருப்பதை உறுதி செய்துள்ளது இந்திய அரசு. மேலும், விமானி பத்திரமாக நாட்டுக்குத் திரும்ப அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசு தரப்பு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 'பாகிஸ்தான் வசம் பிடிபட்டுள்ள இந்திய விமானியை, அந்நாட்டு அரசு துன்புறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சர்வதேச மனித உரிமை விதிகளை பாகிஸ்தான் தரப்பு மதித்து நடந்துகொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வசம் பிடிபட்ட இந்திய விமானியை, அந்நாட்டு மக்கள் அடிப்பதையும், அவர் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டிருப்பதையும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் மூலம் பார்க்க முடிந்தது. பின்னர் அவர் டீ குடித்துக் கொண்டு பேசும் வீடியோவும் வைரலானது. தொடர்ந்து அவரது நிலை குறித்து இந்திய தரப்பு கவனித்து வருகிறது. சீக்கிரமே அவரை விடுவித்து நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், ராணுவ தளபதிகளுடன் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் விமானியை மீட்பது குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தப்பட்டது. எந்த மாதிரியாக செயல்பட்டு விமானியை மத்திய அரசு மீட்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.