பாரீஸில் நடக்கும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்கிறார் மோடி.
New Delhi: பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருக்கும் இந்திய மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அவர், “புதிய இந்தியாவில் ஊழலுக்கு எதிராகவும், குடும்ப அரசியலுக்கு எதிராகவும், பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராகவும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் அழுத்தம் அதிகரித்து வருகிறது” என்று பேசியுள்ளார்.
“இந்தியா, படுவேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது… மோடியால் அல்ல, ஆனால் நாட்டு மக்களின் வாக்குகளால் அது சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது.” என்று பாரீஸில் இருக்கும் யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்கள் மத்தியில் பேசினார் மோடி.
அவர் மேலும், “தற்போது பதவிறேற்றிருக்கும் அரசு 75 நாட்களைத்தான் முடிவு செய்துள்ளது. அதற்குள்ளாகவே, நாடாளுமன்றத்தில் சாதனை படைக்கும் வகையில் வேலைகள் நடந்துள்ளன. 100 நாட்களுக்கான இலக்கு வர உள்ளது. பொதுவாக முதல் 50 - 75 நாட்கள் திட்டமிடுவதற்கும், வாழ்த்துச் செய்தி பெறுவதற்கும்தான் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த அரசின் கொள்கை என்னவென்று நீங்களே பார்க்கலாம். இந்த அரசுக்கு பணிதான் முக்கியம்” என்றார்.
ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமர், சூசகமாக தெரிவித்தார். “இனியும் தற்காலிகமாக எதுவும் நடக்காது. இந்த தற்காலிகமாக என்னும் விஷயத்தை நீக்க 70 ஆண்டுகள் எடுத்தன. நாங்கள் எங்களின் இலக்குகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்துக் காட்டுவோம்” என்று முடித்தார் மோடி.
பிரதமர் மோடி, அடுத்த 5 நாட்களில் 3 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார் மோடி. அதைத் தொடர்ந்து பாரீஸில் நடக்கும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்கிறார்.