PM Narendra Modi: 'ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு, எந்த இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளதோ, அந்த இடங்களில் அடிப்படை பணிகள் நடைபெற அனுமதிக்கப்படலாம்.'
ஹைலைட்ஸ்
- இன்றுடன் 21 நாட்கள் தேசிய ஊரடங்கு முடிவுக்கு வர உள்ளது
- இந்நிலையில் மே 3 வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
- ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் இருக்கும்: மோடி
New Delhi: தேசிய ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்றுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் காணொளி மூலம் உரையாற்றினார்.
அப்போது அவர், “இந்தியா முழுவதற்கும் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இனியும் கொரோனா ‘ஹாட்ஸ்பாட்டுகள்' ஏற்படாதவாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா அதிகமுள்ள ஹாட்ஸ்பாட்டுகளில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நாடு முழுமைக்கும் கடுமையான கட்டுப்பாடுகளுடைய முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு, எந்த இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளதோ, அந்த இடங்களில் அடிப்படை பணிகள் நடைபெற அனுமதிக்கப்படலாம். ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதுதான் எனது முதல் நோக்கமாக இருக்கும்.
அனைத்துப் பகுதிகளிலும் எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பது குறித்து ஆராயப்படும். சமூக விலகலையும் ஊரடங்கு உத்தரவையும் கடைப்பிடித்ததால் நம் நாடு பயனடைந்தது. ஆனால், அதற்கு நாம் ஒரு விலை கொடுத்தோம். உயிரைக் காப்பதைவிட எதுவும் முக்கியமல்ல.
இந்தியா, கொரோனாவால் பிரச்சினை அதிகரிக்கும் வரையில் காத்திருக்கவில்லை. இந்த தொற்று நோயைக் கையாள முடியாமல் பல வளர்ந்த நாடுகளே திண்டாடி வருகின்றன.
இந்த நாட்டைக் காக்க நீங்கள்தான் உதவி புரிந்தீர்கள். ஆனால், அதற்காக நீங்கள் சந்தித்து வரும் இன்னல்களையும் நான் அறிவேன். சிலர் உணவுக்கும், அடிப்படைப் பொருட்களுக்கும் கஷ்டப்பட்டு வருகிறீர்கள். உங்கள் முன் நான் தலை வணங்குகிறேன்.
இந்த வரைஸ் தொற்றை எதிர்த்து நாம் போராடுவது, பாபா சாகேப் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். இந்த நாடு ஊரடங்கின் போது, ‘நாம் இந்தியர்கள்' என்பதை நிரூபித்தது. உங்கள் குடும்பத்தின் நல்ல ஆரோக்கியத்திற்கு நான் பிரார்த்திக்கிறேன்,” என்று தன் உரையில் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.