பிரதமர் நரேந்திர மோடியை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ஆகியோர் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. கூட்டணி ஒப்பந்தப்படி, அதிமுகவின் ஆதரவால் அன்புமணி மாநிலங்களவைக்கு தேர்வானார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ராமதாசும், அன்புமணியும் இன்று சந்தித்து பேசினர். அப்போது மோடியிடம் பாமக தரப்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அதில் ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.