பாதுகாப்புக்கான காபினட் கமிட்டி சந்திப்பு நடந்ததைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
Jammu and Kashmir tension: ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் அது குறித்து விளக்கம் அளித்து வருகிறார். இரு அவைகளுக்கும் அவர் விளக்கம் கொடுக்க உள்ளார்.
முதலில் அமித்ஷா, ராஜ்யசபாவில் பேசுவார் என்றும் லோக்சபாவில் அடுத்ததாக பேசுவார் என்றும் தெரிகிறது. அமித்ஷா, ஜம்மூ காஷ்மீர் ரிசர்வேஷன் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2019 குறித்துப் பேசுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த மசோதாவின் மூலம் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 35ஏ நீக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இன்று காலை அது குறித்து விவாதித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் இருவரும் காஷ்மீர் சூழ்நிலை குறித்துப் பேசியுள்ளனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் இருக்கும் பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்துள்ளது. காஷ்மீரில் ஸ்திரத்தன்மைற்ற சூழல் காரணமாக அங்கிருக்கும் முன்னாள் முதல்வர்களான மெஹ்பூபா முப்டி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக்கான காபினட் கமிட்டி சந்திப்பு நடந்ததைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புக்கான காபினட் கமிட்டியில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரமாக ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக் கிழமை, மத்திய அரசு, மிகவும் அசாதாரண வகையில் அமர்நாத் யாத்ரிகர்களை உடனடியாக மாநிலத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது. இதனால் மாநிலத்தில் பதற்றமான நிலை உள்ளது. மக்களும் அன்றாடப் பொருட்களை வீட்டில் வாங்கிக் குவித் வண்ணம் உள்ளனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவுகளான 35ஏ மற்றும் 370 ஆகியவை திருத்தப்படலாம் என்று ஆருடம் சொல்லப்படுகிறது. பாஜக, தனது தேர்தல் அறிக்கையில் இந்த இரு சட்டப் பிரிவுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் உள்ளனர்
இதை மனதில் வைத்துதான் ஜம்மூ காஷ்மீரில் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் ஒமர் அப்துல்லாவின் தந்தையான ஃபரூக் அப்துல்லாவின் வீட்டில் ஒன்றாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஃபரூக் அப்துல்லா வாசித்தார். “சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவை மாற்றப்பட்டால் காஷ்மீரில் எதிர்பாராத விளைவுகள் ஏற்படும்” என்று கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மான் நிறைவேற்றப்பட்டது. அதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமும் அளிக்க உள்ளனர்.
அந்த சந்திப்பு நடந்த அடுத்த சில மணி நேரங்களில் ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்டி ஆகிய முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
அமர்நாத் யாத்திரையை ரத்து செய்தது மத்திய அரசு
“நான் இரவில் இருந்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன் என நினைக்கிறேன். அது உண்மையா என்பதை என்னால் அறிய முடியவில்லை. அல்லா நம்மைக் காப்பாற்றுவார்” என்று ட்விட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார் ஒமர் அப்துல்லா.
அப்துல்லாவுக்கு காங்கிரஸின் சசி தரூர், சிபிஎம்-ன் சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.