பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.
New Delhi: உத்தரகாண்ட்டிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று காலை கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து, நாளை டெல்லிக்கு திரும்பி செல்வதற்கு முன்பு பத்ரிநாத் கோவில் வழிபாட்டுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த ஏப்.11ஆம் தேதி தொடங்கிய தேர்தலில், 6 கட்டமாக இதுவரை 483 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், மீதமுள்ள 59 தொகுதிகளில் நாளை 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவ நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 2 மாதங்களாக பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். ஒட்டுமொத்தமாக நேற்று தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், இமயமலையில் உள்ள கேதார்நாத் கோவில் சென்ற மோடி, அங்கு பாரம்பரிய உடை அணிந்து தரிசனம் மேற்கொண்டார்.
மோடியின் வருகையையொட்டி, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடல் மட்டத்தில் இருந்த 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். இந்த கேதார்நாத் கோவிலுக்கு பிரதமர் அடிக்கடி வருவது வழக்கம். கடந்த நவம்பர் மாதம் தீபாவளியையொட்டி கேதார்நாத் வருகை தந்தார்.
குளிர்காலங்களைத் தவீர மீதமுள்ள 6 மாதங்கள் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் பிரதமர் மோடி இரண்டுமுறை இங்கு வருகை தந்தார்.