அடுத்து வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழு ஊரடங்களை எதிர்கொள்ளவுள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனா தடுப்பு தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் மோடி
- அடுத்து வரும் 21 நாட்களுக்கு இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்
- 21 நாட்களை சமாளிக்காவிட்டால் பேரிழப்பை எதிர்கொள்ள வேண்டி வரும் : மோடி
இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு 2-வது முறையாக இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது-
எந்த துயரம் வந்தாலும் அதனை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் என்பதைத்தான் மக்கள் சுய ஊரடங்கு உணர்த்தியது. நாட்டுக்காகவும், மனிதக் குலத்தின் நன்மைக்காகவும் நான் சுய ஊரடங்கை கடைப்பிடித்தோம்.
கடந்த 2 நாட்களாக நாட்டின் பெரும்பான்மையான இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. நாட்டைக் காக்க இன்றிரவு 12 மணி முதல் ஒட்டுமொத்த இந்தியாவே முடக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசங்களும் முடக்கப்பட்டிருக்கும். கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்றால் இந்த கடுமையான நடவடிக்கை மிக அவசியம்.
இந்த தேசிய ஊரடங்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களின் உயிர்கள் எனக்கு முக்கியமானது. எனவே நீங்கள் நாட்டின் எந்தப் பக்கத்திலிருந்தாலும் நடமாட்டத்தைத் தவிர்த்துக் கொள்ளவும். அடுத்து வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு இருக்கும்.
சுகாதாரத்துறை வல்லுநர்கள், கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் ஆகியோரது அனுபவங்களின்படி 21 நாட்களுக்கு ஊரடங்கு இருக்க வேண்டும்.
இந்த 21 நாட்களை நாம் சமாளிக்காவிட்டால் பல குடும்பங்கள் அழிந்து விடும். 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும். ஒன்றேயொன்றை மட்டும் செய்யுங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு ரூ. 15 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் கூடாமல் இருப்பதுதான் ஒரே வழி.
வீட்டில் இருக்கும் அதே நேரத்தில் மக்களின் நலனுக்காக கொரோனாவுடன் போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்காகப் பிரார்த்தியுங்கள். ஊடக நண்பர்களையும் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். சாலைகள், மருத்துவமனைகளில் நின்றுகொண்டு அவர்கள் 24 மணிநேரமாக உங்களுக்காக உழைக்கிறார்கள்.
அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், 21 நாள் ஊரடங்கை இந்திய மக்கள் அனைவரும் வெற்றிகரமாக கடைப்பிடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அன்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். யாரும் தேவையில்லாமல் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.
இதேபோல், நேற்றைய தினம் பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்து இருந்தார். பலரும் ஊரடங்கு உத்தரவுகளைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்.
அரசின் உத்தரவுகளை முறைப்படி பின்பற்றுங்கள். மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்,” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று நாட்டு மக்களுக்குப் பல முக்கிய தகவல்களை அளித்துள்ளார் பிரதமர் மோடி.