சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
New Delhi:
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவர் உளவு பார்த்ததாக கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை உத்தரவிட்டது.
ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா அதே ஆண்டு மே மாதம் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை ஏற்ற சர்வதேச நீதிமன்றத்தின் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2017 மே 18ம் தேதி குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு தடை விதித்தது.
இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் உள்ள, தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியா வழக்கு தொடர்ந்தது. கடந்த பிப்ரவரியில், நான்கு நாட்கள், இரு தரப்பு வாதங்களை நீதிமன்றம், விசாரித்தது. இந்நிலையில் இரு தரப்பு வாதங்களை விசாரித்த தலைமை வழக்கறிஞர், அப்துல்காவி அஹமது யூசுப் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினார். குல்பூஷண் ஜாதவைத் தூக்கிலிட தடைவிதித்து, குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். உண்மைகளை விரிவாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கிய சர்வதேச நீதிமன்றத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தொடர்ந்து, பாகிஸ்தான் நீதிமன்றத்திலும், குல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர், குடிமக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.